Wednesday 16 April 2014

மாற்றான் தோட்டத்து மாங்காய்

"மண்ணுடன் மனிதனுக்கு இருந்த தொப்புள் கொடி உறவு அறுபட்டு விட்டது" என்று எழுத்தாளர் எஸ்.ரா குறிப்பிட்டதைப் பற்றி , நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன்.விடுமுறையில் , வண்ணத்துப்பூச்சிக்கு அலைந்தது, மாடியில் காயும் நெல்லைக் கொத்த வந்த குருவியைப் பிடிக்கப் போட்ட மாஸ்டர் பிளான்,பண்டிகையில் கடலை மிட்டாய் விற்று தொழிலதிபர் ஆனது என நீண்டு கொண்டே சென்ற உரையாடலில் நண்பன் ஞாபகப் படுத்திய கதை இது.

எங்கள் ஊரின் மிகப் பெரிய, புராதான அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி.எனக்கு நண்பர்கள் என மிகப் பெரிய "வானரப் படை" யே உண்டு. அந்தப் படையில் அடக்கி வாசிப்பவன் நான் தான். அப்பா என்ற ஆளுமையின் நன்மதிப்பைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காக இல்லாவிட்டாலும்,அவர்களின் கோபத்திலும்,கண்டிப்பிலும் இன்னுமே எனக்கு ஒரு கிலி உண்டு. இன்றைய  ஆம் ஆத்மியின் சின்னத்தைக் கொண்டு , அன்றே என்னைச் சுத்திகரித்த நிகழ்ச்சிகள் உண்டு.இதில் கொஞ்சம் படிக்கக் கூடியவன் என்று ,ஆசிரியர்களால் குறிக்கப்பட்டவனாதலால் , ஏதாவது தவறு செய்தால் "யூ டு புரூட்டஸ்" என்ற கேள்விகளால், துளைத்தெடுக்கப்பட்டு தர்ம சங்கடங்களுக்கு ஆளாவதை விரும்பாத காரணத்தினாலும், "ஊமைக் குசும்பு" மட்டுமே பண்ணிக் கொண்டு இருந்தேன்.

அப்படித் தான் ஒரு நாள் மதிய உணவுக்குப்பின், நண்பன் பள்ளியை ஒட்டிய மாந்தோப்பைப் போய் பார்த்து வரலாம் என்றான். அது " என்னை மாட்ட நினைத்திடும் சிறைச்சாலை "என்பது என் சிற்றறிவுக்கு அப்போது எட்டவில்லை.நான்கு உயிர்(எடுக்கும்) நண்பர்களுடன் சென்றோம்.பள்ளிக்கு மிக அருகில் ,முட்டிக்கால் உயரமே உள்ள  மண் சுவர் தடுப்பு.தாண்டிப் போவதில் சங்கடம் எதுவுமில்லை.மிக அடர்த்தியான , மரங்கள்.அந்த மாவிலைகளின் மணம் நாசிக்கும், பழுத்துத் தொங்கும் மாங்கனிகள் கண்ணுக்கும் விருந்தளிக்க , போதி மரம் என்பது மாமரமாகத் தான் இருக்க வேண்டும் என நான் கற்பனையைத் தட்டி விட, "நோ மோர் சில்லி ஃபீலிங்ஸ்" என்று என்னை நினைவுலகத்திற்கு கொண்டு வந்து, நண்பன் ஆட்ட யுக்தி(game plan) யை விளக்கத் தொடங்கினான்.மிக வேகமாக ஓடக் கூடிய ஒருவன் தோப்பின் நுழைவாயிலுக்கு அருகில், மரத்திற்கு கீழ் ஒருவன், வேகமாக , ஏற இறங்கத் தெரிந்த நான்( முன்பொரு நாள் ,புளிய மரத்திலிருந்து கீழே விழுந்து கையை உடைத்து, "வ வ்வால் கை" என்று , இன்றும் அன்புடன் அழைக்கப்படும் தகுதியும் உண்டு) . நான் ஒரு முறை மரத்தை நோட்டமிட்டு, " லோ ஹேங்கிங் ஃபுரூட்ஸ்"  ஐ , குறித்துக் கொண்டு மின்னல் என ஏறினேன். 

கண்ணிமைக்கும் நேரத்தில் , ஆளுக்கு ஒன்று என ஐந்து மாங்காய்கள் மண்ணைத் தொட, கீழே நின்றவன் எடுத்து ருசி பார்க்க( தரக் கட்டுப்பாடு) , சுவையில் ஆளும் தருணத்தில் " ஓடுங்கடா" சத்தம். கடைசியாகப் பறித்த மாங்காய் கையுடன் நான் ஓட ஆரம்பித்து விட்டேன். திரும்பிப் பார்க்கும் போது நண்பன் , காவலாளியின் மேல் கையில் வைத்திருந்த மாங்காய்களை வீசி எறிந்து அவரை நிலை குலையச் செய்து விட்டு, ஓடி விட்டான். நான் நேராக என் வகுப்புக்கே வந்து(புதுத் திருடன்), கையில் மாங்காய் இருப்பதை உணர்ந்து, ஒரு கடி கடித்து விட்டு, வகுப்பாசிரியரின் மகனின் தூக்குச்சட்டி ( டிபன் பாக்ஸ்) யில் போட்டு , மூடி வைத்து விட்டு(குயுக்தி) , வெளியே வரவும், ஒரு சிறுவன் அந்த காவலாளியை வகுப்புக்குள் கூட்டிச் செல்கிறான். அப்பாடா! தப்பித்தோம் என பெருமூச்சு விட,அந்த பள்ளியில் படிக்கும் என் அண்ணன் வேகமாக வந்து என் கன்னத்தைத் தட்டி, ஒட்டியிருந்த மாங்காயின் துணுக்குகளை மறைத்தார்.என்னை முறைத்தார்.

அடுத்த நாள் அசெம்பிளியில், பேச்சாளரான எனது வகுப்பாசிரியர் " மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்றார் அண்ணா.நம் மாணவர்கள் , ஒரு படி அதிகமாக மாற்றான் தோட்டத்து மாங்காய்க்கும் ருசி உண்டு, என்று அத்துமீறி பக்கத்து தோட்டத்தில் நுழைந்து கைவரிசையைக் காண்பித்து  உள்ளனர். ..." 

இன்று வரை அந்த திருடனைக் கண்டுபிடிக்கவே இல்லை அவர்கள்.


Saturday 25 January 2014

நன்றி

வீட்டுக் கடன் வங்கிக் கணக்கை ,  வட்டி குறைந்த மற்றொரு வங்கிக்கு  மாற்ற ஆசை தான். நான் மலைத்தது , அவர்கள் கேட்ட ஆவணங்களைக் சேகரிக்க எடுக்க வேண்டிய முனைப்ப, நேரம். ஆனாலும் ஆதாயம் கருதி சம்மதித்தேன்.எல்லா வேலையும் முடிந்தது எனக் கருதிய வேளையில் , எனது சொந்த ஊரில் என. பெயரில் உள்ள , ஒரு வங்கிக் கணக்கின்  ஆண்டு அறிக்கை வேண்டும் என்றார்கள்.அந்த வங்கியின் இணையக் கடவுச் சொல்லை தொலைத்திருந்தேன். வேறு கடவுச் சொல்லுக்காக தொடர்பு கொண்டதில் , ஒரு வாரம் ஆகும் என்றனர்.நுகர்வோர் சேவை மையம் வங்கியின் சென்னை கிளையைத் தொடர்பு கொள்ளச் சொன்னார்கள்.

சென்னைக் கிளையில் , என்னை ஒரு அற்பப் புழுவைப் போல பார்த்தனர். முடியாது, நீங்கள் எங்கு கணக்கு வைத்திருக்கிறீர்களோ , அங்கு தான் செல்ல வேண்டும், இல்லை கடிதம் எழுதுங்கள்(இந்தக் காலத்தில், இப்படியும்) , அவர்கள் அனுப்பி வைப்பார்கள் என்றனர்.நம்பிக்கை இழந்தவனாக , எதற்கும் கேட்டு வைப்போம் என்று அலைபேசியில், அந்த கிளையிலிருந்தே எனது சொந்த ஊர் வங்கியைத் தொடர்பு கொண்டேன். மறுமுனையில் மிக அக்கறையோடு என் தேவையைக் கேட்டார், மேலாளர் என்று நினைக்கிறேன், எனது நிலையை விளக்கி , அதன் அவசரம் குறித்தும் கூறினேன்.என்னுடைய கணக்கு எண் போன்ற விவரங்களை வாங்கிக் கொண்டவர்,உடனடியாக ஒரு கோப்பு எண்ணைக் கொடுத்தார். சென்னை வங்கியின் மேலாளரிடம் கொடுங்கள், அவரால் இந்த எண்ணை வைத்து உங்கள் அறிக்கையை , தரவிறக்கம் செய்து தர முடியும், ஒரு வேளை முடியவில்லை என்றால் திரும்ப அழையுங்கள் என்றார்.நன்றி கூறி , அவ்வாறே செய்தேன்.எனக்கு வேண்டிய அறிக்கை , அரை மணி நேரச் செலவில் கையில் கிடைத்த திருப்தியுடன், என் பணிகளில் மூழ்கி விட்டேன். 

ஒரு வாரம் கழித்து , மீண்டும் ஒரு தேவையில் , எனது ஊர் வங்கி மேலாளரை அலைபேசியில் அழைத்தேன்.யாரெனச் சொன்னதும், "  அன்று உங்கள் வேலை முடிந்ததும், என்னைத் திரும்ப அழைப்பீர்கள் என்று நினைத்தேன்.ஆனால் நீங்கள் கண்டு கொள்ளவில்லையே?" என்றார். திடுக்கிட்டேன் ஆம் அழைக்கவில்லை தான், எந்த அளவுக்கு சுயநலத்துடன் இருக்கிறோம் என்பதோடு  உதவும் மனம் கொண்ட ஒருவருக்கு, இதை மாதிரியான செயல்கள் என்ன எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எண்ணம் தான் என்னை வெக்கித் தலை குனிய வைத்தது.இதை உணர வைத்த அந்த வங்கி மேலாளருக்கு என் மனப்பூர்வ நன்றிகள் இரண்டாவது முறையாய்...





Friday 6 December 2013

இவன் வேற மாதிரி..

நம்மைச் சுற்றியிருப்பவர்களின் கருத்துக்களாலும்,கணிப்புக்களாலும் நம்மைப் பற்றி ஏற்படுத்திக் கொண்ட சுய பிம்பம் தான் நம்மில் கர்வத்தையோ,தாழ்வு மனப்பான்மையோ ஏற்படுத்துகிறது. இந்த மாணவனை , என் செக்ஷனுக்கு கொடுங்கள் , இந்த முறை 10 ஆம் வகுப்பு பள்ளி முதல் மாணவன், என் செக்ஷனிலிருந்து வர வேண்டும் என்றெல்லாம் ஆசிரியர்கள் என்னைப் பற்றி பேசுவது கேள்விப்படும் போது, அந்த அறிவுச் செருக்கு வருவது இயல்பு தானே.அவர்களின் நம்பிக்கைகளை பூர்த்தி செய்யவில்லை என்றாலும், அது குறித்த வருத்தங்கள் கிடையாது.உழைப்புக்கேற்ற கூலி எனக் கடந்து வந்து விட்டேன்.

கல்லூரிப் படிப்பையும் முடித்து, ஒரு தனியார் நிறுவனத்தின் கணிப்பொறி சார்ந்த துறையில் நுழைந்தாகி விட்டது.அங்கு தான் அவனைச் சந்தித்தேன்.கிராமத்தை தன் உடையில்,தோற்றத்தில்,பேச்சில் கொண்டிருந்தான்.பழகுவதற்கு எளியவனாகத் தெரியவில்லை.உணவு இடைவேளைகளில் புன்முறுவலோடு சரி.நிறுவனம் தரக்கட்டுப்பாடு பெறுவதான முயற்சியில், என்னை ஒருங்கிணைப்பாளனாக அமர்த்தியிருந்தது.ஒரு நாள், அவனுடைய மென்பொருள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்த ஆவணங்களைப் பார்வையிடுவதான சந்திப்பில் , என்னுடைய கருத்துக்களில் அவன் உடன்படவில்லை.உரத்த குரலில் "நீ முட்டாள் உன்னுடன் என் நேரத்தை விரயமிட விரும்பவில்லை" என்று எழுந்து சென்றான்.திடுக்கிட்ட என்னை , மற்றவர்கள் சமாதானப்படுத்தினார்கள்.என் கணிப்பில் , அவன் முரடனாய், மன முதிர்ச்சி அற்றவனாய் தாழ்ந்து போனான்.

அடுத்த நாள் உணவு இடைவேளையில்,ஒரு மரத்தடியில் நின்றிருந்த என்னைப் பார்த்து புன்முறுவலுடன் வந்தான்."மன்னித்துக் கொள்,நான் நேற்று அப்படி நடந்து கொண்டது தவறு" என்றான்.நான் ஒரு தலையாட்டுதலோடு நிறுத்திக் கொண்டேன்.எந்த ஊர், என்ன படிப்பு, எந்த வருடம் என்ற விசாரிப்புகளுக்குப் பிறகு இறுக்கம் தளர்ந்து தமிழில் பேசிக் கொள்ள ஆரம்பித்தோம்.இப்படியாகத் தொடங்கிய பழக்கம், வாடா,போடா என்ற அளவிற்கு நெருக்கமானது ஒரு விடுமுறை நாளில். உற்சாக பானம் அருந்தலாம் என்று முடிவு செய்து, அவன் அறைக்குச் சென்றேன்.அவனுடைய மற்றொரு நண்பனுடன்,சமையல் அறையில் இருந்தான்."சமைக்கத் தெரியுமா உனக்கு?" என்ற கேள்விக்கு  "என்னங்க இப்படிக் கேட்டுடிங்க,பக்கத்து வீட்டு மாமி கூட இவன்ட சமையல் டிப்ஸ் கேக்கிற அளவுக்கு ஃபேமஸ்" அவன் நண்பன் பதிலளித்தான்.அதற்கு அவன், "மாடு மேச்சாக் கூட இவன் மேய்க்கிற மாதிரி வராதுனு சொல்லணும்" என்றான்.அந்த ஈடுபாட்டை சமைக்கும் நேர்த்தியில்,உணவின் ருசியில் தெரிந்து கொண்டேன்.தாக சாந்தியில் , ஏதோ அலுவலக விஷயம் குறித்த பேச்சில் சொன்னான்,"அன்று நான் சொன்ன விதம் தவறாக இருந்தாலும், என் கருத்து இன்னும் அது தான்"  என்றான்."இருக்கலாம்,அதைச் சொல்வதற்கான தகுதி உனக்கு உண்டா"? விவாதம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. உரத்த குரலில் , அவன் ஆரம்பித்தான்.மென்பொருள்,அதன் கட்டமைப்பு, வடிவமைக்கும் முறை , எந்த புதிய மென்பொருளையும் கற்கும் முறை ,ஆவணப்படுத்தும் திறன் என ஒரு மணி நேரம் நடத்திய பிரசங்கத்தில் தான் முதல் முறையாக , என் சுய பிம்பம் சுக்கு நூறாக உடைந்தது.அவன் மிகுந்த திறமைசாலி , வித்தியாசமானவன் என்று கண்டு கொண்டேன். எந்த ஒரு விஷயத்திலும்,பிரச்சினையிலும் அவனுக்கென்று ஒரு தெளிவான பார்வை இருந்தது.தினமும் ஏதோ ஒரு விஷயத்தில் என்னை ஆச்சரியப்படுத்தினான்.கொஞ்சம் , கொஞ்சமாய் அவனது ரசிகனாகவே மாறிப் போனேன்.அலுவலக விஷயங்களில், அவனிடம் ஒரு கருத்து கேட்டு, விவாதம் புரிந்தே காரியங்கள் ஆற்றினேன்.

ஒரு நாள் "எனக்கு தங்குவதற்கு ஒரு ரூம் ஏற்பாடு பண்ணுடா" என்றான். "ஏற்கனவே இருந்த ரூம் என்ன ஆச்சு"."பிடிக்கலை, வெளியே வந்துட்டேன்". "இப்ப எங்கே தங்கிற?". "ஆஃபீஸ் முடிஞ்சதும், எங்கேயாவது நைட் ஷோ.அப்புறம் பஸ் ஸ்டாண்ட் ல போய் தூங்கிட்டு , காலைல கட்டண கடன்,குளியலை முடித்து, 2 செட் டிரஸ் இந்த பையில் , மாத்தி , மாத்தி போட்டுட்டு ஆஃபீஸ் வர்றேன்" என்று சொல்லி , எனக்கு மீண்டும் அதிர்ச்சி கொடுத்தான்.நண்பர் ஒருவரின் உதவியுடன் , அன்றே ஒரு ரூம் ஏற்பாடு செய்தேன்,இன்னும் இருவருடனும்  அறையை, வாடகையை ஷேர் பண்ண வேண்டும்.அதன் பின் அவனை , அலுவலகத்தில் சந்திக்க முடியவில்லை. ஒரு நாள் அலுவலக தொலைபேசியில் தொடர்பு கொண்டு, வேறு அலுவலகத்தில் சேர்ந்து விட்டதாகவும், அன்று மாலை சந்திப்பதாகவும் கூறினான்.மாலையில் வந்த போது, நிறைய மாற்றம் தென்பட்டது.மிகத் தரமான உடை, காலணி,அக்கறையுடன் தலை வாரி இருந்தான்.புது அலுவலகம்,அவனது புராஜக்ட் பற்றி ஈடுபாட்டுடன் பேசினான்.விடை பெறும் முன், 2000 ரூபாய் வேணுண்டா, மகளுக்கு உடம்பு சரியில்லை என்றான்.திருமணம் ஆகி விட்டதா, எனக்குத் தெரியாதே என்றேன். ஆமாடா, படிச்சிட்டு இருக்கும் போதே, காதல் திருமணம் என்றான்.உடன் படித்தவர்களா?  சிரித்தான்,அவளுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்றான். பணம் கொடுத்தனுப்பினேன்.குடும்பத்தை சீக்கிரமா சென்னைக்கு அழைத்து வரச் சொன்னேன்.

ஒரு 4 மாத இடைவெளியில், அவன் உடன் தங்கியிருந்த நண்பர் தொலைபேசினார்.உடனே சந்திக்க வேண்டும் என்றார்.மாலை சந்தித்தோம்.நேராக விஷயத்திற்கு வந்தார்.நீங்கள் சிபாரிசு செய்ததால் , அறையில் தங்க இடம் கொடுத்தோம், ஆனால் இப்போது நிம்மதி இல்லாமல் தவிக்கிறோம்.யாரோ லோக்கல் தாதாவை வீட்டுக்கு அழைத்து வந்து தினமும் மது அருந்துவது,சண்டையிடுவது,பக்கத்து வீட்டுக்காரனை அடிக்கச் சென்றது,வாடகை பாக்கி என ஏகப்பட்ட புகார்கள்.வருத்தம் தெரிவித்து,வாடகை பாக்கியை , உடனே கொடுத்து விட்டு, "அடுத்து அவன் வீட்டுக்கு வரும் போது, காலி பண்ணச் சொல்லுங்கள்,என்னை வந்து பார்க்கச் சொல்லுங்கள்" என்று சொல்லி விட்டு வந்தேன்.என்ன மாதிரியானவன் இவன் என வியப்பாக,கோபமாக,வருத்தமாக இருந்தது.அதன் பின் அவனைப் பற்றிய எண்ணம் அதிகமாக இல்லை, சிறிதும் பெரிதுமாக கொடுத்த பணம் 5000 அவ்வளவு தான் , என நினைத்து ஏறக்குறைய மறந்து விட்ட நிலையில், ஒரு நாள் என் அறைக்கு வந்தான்.நான் உன்னிடம் எதுவும் பேச விரும்பவில்லை , என்று நான் சொல்லும் போது, 2500 ரூபாயை எண்ணி என் கையில் தந்து, இன்னும் 2600 உனக்கு தர வேண்டும், இப்பவே வேண்டுமென்றால்,ஏதாவது பொருளாக வாங்கு, நான் கிரடிட் கார்டில் பே பண்ணிக்கிறேன் என்றான்.எனக்கு திருமணம் நிச்சயமான நிலையில் , அதை வாங்கிக் கொள்வதே நல்லது , என்று முடிவு செய்து ஒரு காலணி,சட்டை வாங்கிக் கொண்டு , மேலதிகமான பணத்தை நான்  செலுத்தினேன்.அவன் வழக்கமாகத் தான் இருந்தான்.என்னால் இயல்பாய் பேச முடியவில்லை.

அதன் பின் , நான் திருமண வேலைகளில் மும்முரமாகி விட்டேன்.திருமணம் என்னுடைய சொந்த ஊரில் நடந்ததால் , சென்னை நண்பர்கள் வர முடியவில்லை,அவனும் வரவில்லை.பின் ஒரு நாள் , அலுவலகத்திற்கு தொலைபேசி அழைப்பு.அவன் அடையாளம் சொல்லி, பாரி முனையருகே, நடு ரோட்டில் உணர்வின்றி கிடப்பதாகவும்,உடனே வரும்படி அழைத்தார்கள்.அவன் அலுவலகத்திற்கும் தகவல் சொல்லியதாகச் சொன்னார்கள்.அரை நாள் விடுப்பில் , அங்கு சென்றால் அவனுடைய அலுவலக நண்பர்கள் சிலர் , ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து , ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்து விட்டிருந்தனர்.மருத்துவமனைக்கு விரைந்தேன்.அளவுக்கு அதிகமான குடிபோதையில், நினைவு தப்பி விழுந்து கிடந்திருக்கிறான்.உயிருக்கு ஆபத்தில்லையாம்.அவனுடைய அலுவலகமே செலவை ஏற்றுக் கொண்டது.இனி அவனை சந்திக்கவே கூடாது என்ற முடிவுடன் வீடு திரும்பினேன்.

நாட்கள் உருண்டோட,எல்லா மென் பொறியாளர் போல நானும் அமெரிக்கா சென்றேன்.ஒரு வார இறுதியில், பழைய நண்பர் ஒருவரைச் சந்தித்து உரையாடிக் கொண்டிருக்கும் போது அவனைப் பற்றிய பேச்சு வந்தது.அவன் பெயரைக் கேட்டதுமே அவர் திடுக்கிட்டது போல் தோன்றினார்.அவன் செத்துப் போய் விட்டான் என்றார் கடுமையான குரலில்.நீங்கள் அவன் நண்பரா என்றார், ஆம்,இல்லை எனத் தடுமாறினேன்.அவர் "புரிகிறது, விடுங்கள்" என்று சொல்லி வேறு விஷயங்கள் பேச ஆரம்பித்து விட்டார்.என்னால் முழுமையாக உரையாடலில் ஈடுபடமுடியவில்லை.விடை பெற்றுக் கொண்டேன்.எப்படி இறந்திருப்பான்?குடித்து விட்டு வண்டி ஓட்டி ,விபத்து நடந்திருக்குமோ , என்னவெல்லாமோ சிந்தனை.அவனை மறப்பதற்கு சிறிது காலமாகி விட்டது.நானும் சில வருடங்களுக்குப் பின் இந்தியா திரும்பி விட்டேன்.

ஒரு நாள் என்னுடைய மின்னஞ்சலில், ஒரு செய்தி அவனிடமிருந்து,உடனடியாக அழைக்கச் சொல்லி தொலைபேசி நம்பர் கொடுத்திருந்தான்.எனக்கு அவன் கொடுத்த ஆகப் பெரிய அதிர்ச்சி அது தான்.அமெரிக்க எண்.உடனே அழைத்தேன்.தான் அழைப்பதாக்க் கூறி, துண்டித்தான்.உடனே அழைத்தான்.உற்சாகமாக பேசினான்.மென் பொறியாளர்களின் கனவு நிறுவனம் ஒன்றில் பணி புரிவதாகவும், தினமும் வேலைக்கு சைக்கிளில் செல்வதாகவும்,அவனுடைய சைக்கிள் பயணம் அங்கு மிகவும் பேசப்படுவதாகவும்,இன்னும் என்னவெல்லாமோ சொன்னான்.உணர்ச்சி மிகுதியில் எனக்கு எதுவும் பேசத் தோன்றவில்லை.தொலை தூர அழைப்பு என்பதால் வெகு நேரம் பேச முடியவில்லை. அதன் பின், இன்று வரை அவன் தொடர்பு கொள்ளவில்லை. எனக்குத் தெரியும் கண்டிப்பாக எனக்கு மற்றுமொறு யூகிக்க முடியா , அதிர்ச்சியைக் கொடுப்பான் அடுத்த சந்திப்பில்... அது இன்ப அதிர்ச்சியாக இருக்கட்டும்.


Sunday 24 November 2013

நண்பன்டா...

தொடர்ந்த வேலை தந்த அயர்ச்சியில் இருந்தவன், கல்லூரி கால நண்பன் பாபுவின் தொலைபேசி அழைப்பைக் கேட்டதும் சிறிது மலர்ந்தேன்.25 வருட கால நண்பன்,சிரிக்க ,சிரிக்கப் பேசுபவன்.தொழில் விஷயமாய் சென்னைக்கு வருகிறான். மாலை ஐந்து மணிக்குப் பார்க்கலாம் என்று முடிவாகியது.அவனை நேரில் பார்த்து வெகு காலமாகி விட்டது.எண்ணங்கள் உற்சாக ஊற்றாக ,கல்லூரி கால வாழ்வை அசை போடத் தொடங்கியது.

அந்த கல்லூரியோ,விடுதியோ ஒரு மாணவன் வாழ்க்கைக்கு இணக்கமான சூழ்நிலையைக் கொண்டிருக்கவில்லை. ஒரு விடுமுறை நாளில், அவன் மீசையை சவரம் செய்யும் ஒரு ரத்தக்களரியான போராட்டத்தில் தான்  முதலில் அவனைக் கண்டேன்.அருகில் சென்று , "உதவட்டுமா?" என்றேன். என் மீசையின் அடர்த்தியைப் பார்த்து புரிந்து கொண்டான்,எனக்கு முன் அனுபவம் இருக்கிறது என்று.இப்படியாக ஆரம்பித்த நட்பு, ஒரு நேரத்தில் விடுதி வாழ்க்கையின் அடக்குமுறையை சகிக்க முடியாது , வீட்டிலும், கல்லூரி முதல்வரிடமும் தகுந்த பொய்யைச் சொல்லி, விடுதி விட்டு வெளியே வந்தோம் சீனியர் ஒருவரின் வழி காட்டலில் , வீடும் இல்லாது , ஹோட்டலும் இல்லாது , திருவல்லிக்கேணி மேன்ஷன்கள் போன்று, கீழே கடைகளும் , மேலே வரிசையாக ஒரு அறை வீடுகளும், இரண்டு முனைகளிலும் கழிவறைகளையும் கொண்ட இடத்தில் , ஒரு அறையில் தஞ்சமடைந்தோம்.

கீழே கடையில் உள்ளோரோ, மற்ற சுற்றுப்புறத்தாரோ எங்களை விரோதிகளைப் போலவும்,அவர் தம் பெண்டிரை எங்கே நாங்கள் கவர்நது விடுவோமோ என்பது போலத்தான் பார்ப்பார்கள்.அதைப் புறக்கணித்து , எங்கள் வேலையை, சந்தோஷங்களை எந்தப் பழுதில்லாமல் நிறைவேற்றிக் கொள்ளும் திறன் இருந்தது எங்களிடம்.அந்த ஊரைச் சேர்ந்த நண்பனின் உதவியுடன் ,  டிவி, டெக் வாடகைக்கு எடுத்து படங்கள் பார்த்து எங்கள் கலை மற்றும் இளமை தாகங்களைத் தீர்ப்பதற்கு நாங்கள் மிகவும் பாடுபட்டிருக்கிறோம்.எப்போதாவது தாக சாந்தி தீர்த்து, அறையை அடுத்த நாள் கழுவி விட்டு சாம்பிராணி போட்டு மணக்க வைக்க முயற்சித்திருக்கிறோம்.இப்படியாக , இனிமையாக கழிந்து கொண்டிருந்த எங்கள் வாழ்க்கையை , அதன் ஒழுங்கு முறையைக் கலைத்துப் போட்டவர் கண்ணன் .எங்கள் சேவல் பண்ணையின் பக்கத்துக் கூடு.நடுத்தர வயது.அரசு அலுவலகத்தில் பணி.

ஒரு பின்னிரவுக் காட்சிக்குப் பின், நாங்கள் களைத்து புகைப் பிடித்திருந்த வேளையில், அவர்  ஒரு சினேகமான புன்னகையுடன் அருகில் வந்து, "வத்திப் பெட்டி கொடுங்க தம்பி",என்றார், "தம்பி கேசட் கிளியரா இருக்கா ?" என்று திடுக்கிட வைத்தவர், எங்கள் பதிலுக்கு காத்திராமல், "இப்ப அனுபவிக்கிறது தானே?மாட்டிக்காம சந்தோஷமா இருங்க. கார்ட்ஸ் விளையாடுவிங்க தானே? நாளைக்கு ரூமுக்கு வாங்க " என்று  அழைத்து விட்டுச் சென்றார். அடுத்த நாள் கல்லூரி முடித்து , ரூம் அடையும் போது, அவரது ரூமில் நான்கு, ஐந்து பேர் வட்டமாக அமர்நதிருக்க, எல்லோர் கையிலும் பளபளப்பான சீட்டுக்கட்டு சகிதமாக வெடிச்சிரிப்புடன் , உரக்கப் பேசிக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.அந்த காட்சியே எங்களை ஈர்த்தது.உள் ளே நுழைந்ததும், தம்பி, ஒரு ஆட்டம் தான் போயிருக்கு. அதிக பாயிண்ட 30 தான் . உங்களுக்கு 31 போட்டு , ஜாயின் பண்ணிக்கலாம், ஃஆப் ஸ்கூட் கூட இல்லை எனக் கூறிய மிக அதிக நுண் தகவல்கள்  அன்று பிடிபடாவிட்டாலும், போகப் போக புரிந்து கொண்டோம்.அன்றிலிருந்து , கல்லூரி நேரம் தவிர , முழுவதும் இரவு 1 மணி வரை அங்கு தான் எங்கள் வாழ்க்கை.

அந்த விளையாட்டு மட்டுமல்ல, எங்களை ஈர்த்தது அந்த நடுத்தர வயதினரின் இரு பொருள்,ஒரு மொழி பேச்சுக்கள்,பகடிகள்,ஊர் ஆண்களில் உதவாக்கரை, கேள்விக்குள்ளாக்கப்பட்ட பெண்களின் பத்தினித்தனம் என அந்த வயதிற்கான பொழுது போக்கு மட்டுமல்லாது, கண்ணனின் மிக கருத்தான பேச்சுக்கள்,நாடு,கம்யூனிசம்,முதலாளித்துவம்,தாரளமயமாக்கல் என எங்களின் சிந்தனைக்குத்  தீனி போட்டது.எங்களுக்கு கல்லூரி ஆசிரியர்களின் போதனையை விட இது நன்கு புரிந்தது. அவர் மீதான மரியாதை உயர்ந்து கொண்டே சென்றது அந்த சம்பவம் நடைபெறும் வரை.சில நாட்களாக , அவர் ரூம் பூட்டியிருந்தது.உடன் சீட்டு  விளையாடும் சக நண்பர் ஒருவரைப் பார்க்க நேரிட்டது.அவர் சொந்த ஊருக்கு சென்றிருக்கிறார்,ஏதோ குடும்பத் தகராறு , நாளை வந்து விடுவார் என்றார். அடுத்த நாள் அறை திரும்பும் போது, அவர் அறை உள்ளே சத்தம் கேட்கிறது.திறந்திருந்த ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தேன்.உள்ளே படுத்திருக்கிறார்.ஆனால் கையை,உயர்த்தி,முறுக்கி, மிக கெட்ட வார்த்தைகளில், திட்டிக் கொண்டிருக்கிறார்.சிறு நீர்போன்ற ஒரு  நெடி.  என்னைப் பார்த்ததும், என் குலம் அனைத்தையும் வம்புக்கிழுத்து , மிக கடுமையான சொல்ல நாக் கூசும் வார்த்தைகளில் திட்டி, கதவைத் திறக்கச் சொன்னார். ஆனால் கதவு உட்புறமாகத் தான் தாளிடப்பட்டிருந்தது.நான் எதுவும் சொல்லாமல் ,கோபத்துடன் அறை திரும்பி விட்டேன்.குடித்தவருடன் தகராறு செய்ய விருப்பமின்றி.

நண்பன் பாபு வந்ததும்,நடந்த விஷயங்களைக் கூறினேன்.அவன் மிகுந்த கோபமுற்று, அவரை ஆள் வைத்து அடித்தே ஆக வேண்டும் என்றான்.எனக்கு பெருமையாக இருந்தது,இப்படி ஒரு நண்பன் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டுமென நினைத்துக் கொண்டேன்.பல திட்டங்களைத் தீட்டி,இறுதியில் டிவி,டெக் நண்பரின் உதவியுடன்,இரண்டு தட்டு தட்டலாம் என்று முடிவு செய்து தூங்கிப் போனோம்.அடுத்த நாள் காலை , கண்ணன் நினைவுக்கு வர , வெளியே எட்டிப் பார்த்தால் , வழக்கம் போல , குளித்து ,திருநீர் பூண்டு , தூய உடை உடுத்தி வேலைக்கு கிளம்பியிருந்தார்.என்னைப் பார்த்ததும்,எந்த வித தயக்கமும் இன்றி, "தம்பி, சாயங்காலம் வந்துடுங்க, இன்னிக்கு குமுறிடலாம்" என்று எப்போதும் போல் கூறிச் சென்றார்.மாலை  அறை திரும்பு முன், ஓரக்கண்ணால் அவருடைய அறையை நோட்டமிட்டேன்.பழைய கலகலப்புடன் ,நண்பர்கள் புடை சூழ உட்கார்ந்திருந்தார். நம்ம உயிர் நண்பன் பாபு சீட்டு கலைத்துப் போட்டுக் கொண்டிருந்தான்.வேகமாக அறை திரும்பி,உடை மாற்றி,முகம் கழுவி, அவர் அறைக்குச் சென்று அமர்ந்தேன்,"எனக்கும் ஒரு கை போடுங்க " என்றேன். 

இன்று அவனிடம் நிச்சயம் இதனை நினைவு படுத்த வேண்டும். நண்பன்டா!!!!








Tuesday 1 October 2013

மாலை நோய்

ஏன்ப்பா சபா, லட்சுமி மேடம் இன்னைக்கு லீவா? ஆமா சார் , வயிற்றுப் போக்குன்னு போன் பண்ணினாங்க. "ம்..இனி என்ன போக்குன்னாலும் எனக்கு போன் பண்ணனும்னு சொல்லு அந்தம்மாட்ட" இதைக் கேட்டதும் சத்தமாகச் சிரித்தான் விற்பனைப் பிரதிநிதி. சிரிக்க என்ன இருக்கிறதென்று சபாவிற்கு தெரியவில்லை. சபாவிற்கு தாயும்,மணமாகாத தங்கையும் இருக்கிறார்கள்.சொன்னவனுக்கும்,சிரித்தவனுக்கும் ஒரு பெண் உறவு இருக்கத் தானே செய்யும் என்று நினைத்தான்.

அந்த அலுவலகத்தில், ஆல் இன் ஆல் சபா தான்.காலை அத்தனை பேர் சேர்,டேபிளை துடைத்து, கோப்புகளை அடுக்கி வைத்து, நேரத்திற்கு டீ,காபி,டிபன்,அச்செடுக்க,வங்கிக்கு செல்ல, சில கஷ்டமர்களிடம் கோப்புக்களை கொண்டு சேர்ப்பது என்று.மாதம் 4000 சம்பளம்.தேவைக்கு அதிகமாகப் பேசுவது,எதற்கெடுத்தாலும் டிப்ஸ் எதிர்பார்ப்பது என்ற வழக்கமான குணங்கள் இல்லாத , பிழைக்கத் தெரியாத பிறவி.

புற நகரில் ,வரிசையாக கட்டப்பட்ட வீடுகள்.மனிதர்கள் தான் வாழ்கிறார்கள் என்பதை உறுதி செய்ய , முடிந்த மட்டும் கொட்டப்பட்ட குப்பைகள் தெருவெங்கும், சில கோழிகள், பன்றிகள், மாட்டுச்சாணம்,  சாக்கடை.குறுக்கும் நெடுக்குமாய் நிறுத்தப்பட்ட வாகனங்கள்.வாடகை ரூபாய் 800, ஒரு அறை உள்ள வீடு. சபா இங்கிருந்து நடந்தே அலுவலகம் சென்று விடுவான்.அதிகப்படியான ஆசைகள் பட முடியாத வருமானம்.அவனுக்கோ, தங்கைக்கோ திருமணம் பற்றிய கனவு மட்டுமே இருந்தது.

இன்று சேப்பாக்கத்தில்,  பார்சலை ஒப்படைத்து விட்டு , வீட்டிற்கு செல்ல வேண்டும். கேஷியரிடம் , காசு வாங்கச் சென்றான்.அவர், "சபா, ஆடிட்டர் பெண் , கிளி மாதிரி இருப்பா,உங்க வகையறா தான், உனக்கு பேசி முடிச்சிடலாமா?" என்று சிரித்தார்.அவன் பதில் சொல்லவில்லை.அவரும் எதிர்பார்க்கவில்லை.ஷேர் ஆட்டோ பிடித்து, அந்த வீட்டு போர்டிகோவில் , நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களைச் சிரமத்துடன் கடந்து , அழைப்பு மணியை அழுத்தினான்.காத்திருந்தான். கிளி கதவு திறந்து எட்டிப் பார்த்தது.கிரில் வழியே பார்சலை வாங்கியது.நன்றி சொல்லி மறைந்தது.திரும்பும் போது,நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டியின் கண்ணாடியில் தன் முகத்தை,நரைக்கத் தொடங்கியுள்ள  மீசையைப் பார்த்துக் கொண்டு, சிறிதாகப் புன்னகைத்து கடந்தான்.ஏதோ நடக்க வேண்டும் போல தோன்றியது. சில்லென்ற காற்று , கடலின் அண்மையை நினைவூட்ட, நடந்தே கடற்கரைக்கு சென்றான்.எங்கும் மனிதர்கள்,சந்தோஷமாக,சோகமாக,தூங்கிக் கொண்டு,நடந்து கொண்டு , அமர்ந்து கொண்டு.

இருட்டி விட்டிருந்தது.ஓரிடத்தில் அமர்ந்து , சுற்றிலும் நோட்டமிட்டான் .பக்கத்தில் ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள்.வயதொன்றும் அதிகமில்லை.ஆனால் அங்கங்கள் பெரிதாக,மேலும் பெரிதாக்கிக் காட்டும் ஒப்பனை.என்ன வேண்டும் என்பதாய் தலை ஆட்டினாள். அது எவ்வளவு தருவாய் என்ற தோரணையில் இருந்தது. வேகமாகத் தலையாட்டி, திரும்பி,எழுந்து கொண்டான்.சிறிது புழுக்கமாக இருந்தது.நிறுத்தத்தில் கை காட்டி, ஷேர் ஆட்டோவில் ஏறினான்.அதிக கூட்டமாக இருந்தது.இவன் பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்,இவனுடன் ஒட்டி இருந்ததை கொஞ்சமும் பொருட்படுத்தாமல்,யாரோடோ கைபேசியில் கொஞ்சிக் கொண்டிருந்தாள். "பொறுக்கிடா   நீ ,ரஎப்படித் தெரியும்".காதுகளுக்கு மூடி இல்லை என நினைத்துக் கொண்டான்.புழுக்கம் அதிகமாகியது. முந்திய நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டான்.

வருடத்திற்கு ஓரிரு முறை மது அருந்துவான்.இன்று தேவையாகப்பட்டது. கடையில் 100 ரூபாய் கொடுத்து, பிராந்தி 75 Rs. என்று, மிச்சத்தை எண்ணி வாங்கிக் கொண்டு உள்ளே சென்றான். மிகுந்த குப்பைகளிடையே , உரக்கப் பேசிக் கொண்டு  சந்தோஷமாக மனிதர்கள். சபா ஒரு வாட்டர் பாக்கெட் வாங்கிக் கொண்டு ,   மிக ஓரமான ஒரு டேபிளில் அமர்ந்தான். ஏற்கனவே அந்த டேபிளில் இருந்த காலியான குப்பியை சிறிது நீர் ஊற்றிக் கழுவி, இரண்டு குப்பிகளிலும் சரி பாதியாக ஊற்றி, தண்ணீரால் நிரப்பிக் கொண்டான். ஒரு குப்பியை எடுத்து, ஒரே மூச்சில் மூச்சு விடாது விழுங்கினான்.

அப்போது, ஒரு பெண் அவனருகில் வந்து, "எதுனா தா"  என்றாள். ஆண் குரல். பெண்ணுக்கான எல்லா நளினமும் இருந்தது.அக்கறையான அலங்காரம்.தலையில் பூ  வைத்திருந்தாள்."பெயர் என்ன?"."கமலா". "என் பக்கத்தில் உக்காரு, கமலா" என்றான்.5  ரூபா தா, வாட்டர் பாக்கட் வாங்கியாரேன்". அவள் கையிலும் மதுக் குப்பி. ரூபாய் எடுத்துக் கொடுத்தான். வந்தமர்ந்தாள்.இவனுக்கு வியர்த்தது.அவள் சூடியிருந்த பூ என்னவோ செய்தது.பெண்களின் தலையிலிருக்கும் போது, மலரின் மணம் ஒரு போதை.அடுத்த குப்பியையும் அருந்தினான்.மின்சாரம் நின்று விட்டது. எங்கும் இருள்.அவளருகில் இன்னும் நெருங்கினான்."அவ்வளவு பிடிக்குமா?" என்றாள். "ஆமா"  எனும் போது இவன் மடியில் அவள் கை ஊர்ந்தது.இவன் தடுக்கவில்லை.புத வித போதை.அரை மயக்கம்.கிளி பறந்து வந்து மடியில் அமர்ந்தது.பெரிய அங்கப் பெண் , உதடு குவித்தாள். ஆட்டோக்காரி, "ஆமா, கருப்பு கலர் தாண்டா" என்றாள் கண்கள் தாழ்த்தி.மூச்சு ஏகத்திற்கும் வாங்கியது.மயக்கம் வந்தது.மின்சாரம் வந்த போது, திடுக்கிட்டு விழித்தான். தெளிந்து இருந்தது.

வீட்டுக்கு போகும் போது, தனக்குள் நினைத்துக் கொண்டான், தங்கைக்கு எப்படியாவது திருமணம் செய்து வைக்க வேண்டும்.






Friday 27 September 2013

என் கடவுள்

நண்பன் போனில் "கிரிவலம் போறேன்,  இன்னைக்கு நைட் , வரியா?" ,  "இல்லடா". புன்சிரிப்புடன் போனை வைத்தேன். எத்தனை வருட தேடல்கள்.சிலருக்கு எளிதாக கிடைத்த கடவுள் எனக்கு சிக்கவே இல்லை. நெடுங்காலமாய்.

பெருமாள் கோவிலில் ,சுடலை மாடனில், புனித மாதா சர்ச்சில், வீட்டில் அம்மாவின் கட்டாயத்தில் ஓரிரு முறை நடந்த ஃபாத்தியாவில்,புத்தர் கோவிலில் அந்த கடவுள் உணர்வு வரவில்லை.எப்படி வரும்.ரத்தத்தில் ஊறிப் போன நாத்திகம். எதையும் கேள்வி கேட்கிறது.

ஏன்ப்பா, நம்ம ஜிம்மாவுக்கு போகலாமா? பசங்க என்னை காபிர் னு சொல்றாங்க. நீ விரும்பினால் போகலாம்.எனக்கு நம்பிக்கை இல்லடா.படி பெரியார்,அண்ணா,குர் ஆன், கீதை,வேதம்,ரஸ்ஸல்,கார்ல் மார்க்ஸ் என அறிமுகப்படுத்திய என் முதல் நாயகன் , வீடு வந்து தொழ அழைக்கும் சக நண்பர்களிடம் கண்ணியமாய், தன் இருப்பில் தெளிவாய் வாதாடும்
இன்று வரை நான் பிரமிக்கும் என் அப்பா.

வளர்ந்த பின் ஓஷோ,ஜேகே புத்தகங்கள், லாகிரி வஸ்துகள் எதுவும் தரவில்லை அந்த கணங்கள்.திருச்செந்தூர்,ராமேஷ்வரம்,உத்தரகோசமங்கை,வேளாங்கண்ணி,சில வெளிநாட்டுப் பயணங்கள் ம்ஹீம்.ஜிம்மா போனேன்.நோன்பு வைத்தேன்.அறிவு ஏற்றுக் கொள்ளவில்லை.அல்லா எனக்கு திரை போட்டு விட்டான்.

5 வயதே மூத்த சகோதரி மரணத்தை நெருங்குகிறாள் என்பதை கணிக்க முடிந்த மருத்துவத்திற்கு காப்பாற்ற முடியவில்லை.ஓங்காரம்.என் மரண தொழுகைக்கு முன் தொழு என்றார்கள்.பாவத்தின் சம்பளம் மரணமாம். பால்ய நண்பனிடம் அரற்றினேன்.

 "கதவைப் பூட்டியவன் சாவி இடுக்கு வழி,சற்றே திறந்தவன் சாளரத்தின் வழி. நீ பெருவெளியில் நின்று
கொண்டிருக்கிறாயடா. சட்டங்கள் உனக்கேதுடா"

ஆம், என் கடவுள் மதமற்றவர்.